*வணக்கம் வருகைக்கு நன்றி*

Nov 13, 2011

நிகழ்ந்தவைகளும் நிகழுபவைகளும்@13/11/2011

எல்லையற்ற உலகத்தில் மனிதனாகப் பிறந்த நாம் கண்களுக்கு தெரிந்த பாதையில் நமக்கு கிடைத்த வழிதடத்தில் சக்திக்கும் திறமைக்கும் உட்பட்டு வாழ்ந்து வருகிறோம்.கெடுதலும் நல்லவைகளும் நிறைந்த உலகில் மனதிற்கு கிறுக்கு பிடிக்காதவரை நல்லது நல்லவைகளாகத்  தெரியும்.கெட்டது கெட்டதாகத் தெரியும்.   தான் தோன்றித்தனம் வரும்போது நல்லது-கெட்டதாகத் தெரிகிறது.கெட்டது-நல்லதாகத் தெரிகிறது.இவைகளைக் கடந்து பக்குவம் அனுபவமாக கிடைக்கப்பெறுகையில் நல்லது கெட்டதுகளை  பிரித்து அனுகி வெளியேற முயற்சிக்கையில்  அதுதான் நமது வாழ்க்கையாகிறது.

வாழ்வையும் காதலையும் ஒரு வரியில் வரையறுத்துவிட முடியாது.போராட்டங்கள்,தேடல்கள்,சுகபோகங்கள்,ஏமாற்றங்கள்,அவமானங்கள்,கற்றல்கள்,வேதனைகள் இன்னும் எத்தனையோ? எல்லாம் நிறுத்திவைக்க முடியாத இந்த உயிரை வாழவைக்கத்தானே? இந்த வாழ்விற்க்காக அடிப்படைத் தேவைகளை தேடி இயங்கும் மனித உயிர் மகத்தானாதாகவும் அல்லது தராதரம் குறைவதும்   

எப்போது?
சூழ்நிலைதான் காரணமா?


தலைப்பிற்கு வருகிறேன்.

பிரி.கே.ஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்பு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வீட்டின் எதிரே ஒரு இடத்தில்   பெற்றோர்கள் காலை 8.15ற்கு பள்ளி (வண்டி)வேனிற்காக காத்திருந்து பிள்ளைகளை வழியனுப்பி வைப்போம்.அந்த சில நிமிடங்களில் பள்ளி,படிப்பு,குழந்தை முதல் குடும்பக் கதை வரை பேசுவது அனைத்து அம்மாக்களின் வழக்கம்.எதாவது ஒரு  குழந்தையின் அப்பா வந்தால் அவர் தனியாக அப்பாவியாக  நின்றுகொண்டிருப்பார்.இப்படியாக அந்த நிமிடங்கள் வேன் வரும்வரை கலகலப்பாக இருக்கும்.

எங்கள் பக்கத்து பிளாக்கில் என் மகளைவிட ஆறு மாதம் மூத்த வயது சிறுவன் அபிஜித்.அந்த ஐந்து நிமிட பழக்கம்தான் எனக்கும் அபிஜித் அம்மாவிற்கும்.வேன் வந்தவுடன் அவரவர் குழந்தைகளை அமர்த்திவிட்டு வேன் புறப்பட்டு குழந்தை கண்ணுக்குத் தெரியும்வரை தலையசைத்தோ,டாட்டா காமித்தோ வழியனுப்புவது பெற்றோர்களின் வழக்கம்.என் மகளுடன் விளையாட சில நாட்கள் என் வீட்டிற்கும் அபிஜித் வந்திருக்கிறான்.தொல்லை கொடுக்காத,சொல்வதை கேக்கும் நல்ல குழந்தை அவன்.

அபிஜித் பிரி.கே.ஜி முடித்து எல்.கே.ஜி போகும்போது அவனுக்கு தம்பியும் பிறந்தாகிவிட்டது.அதனால் பள்ளி வேனிற்கு அப்பாவுடன் வந்துகொண்டிருந்த அபிஜித் சில நாட்கள் வரவேயில்லை.அவன் வீடும் எப்போதும் பூட்டப்பட்டிருந்தது.விசாரித்ததில் அபிஜித்திற்கு தொடர்ந்து  காய்ச்சல்,வாந்தி இருந்ததாம்.மருத்துவப் பரிசோதனையில் பிரெயின் ட்யூமர் இருப்பதாகவும் உடனடி ஆப்ரேசனுக்காக லக்னோவில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளதாக சொன்னார்கள்.அதிர்ச்சியாக இருந்தது.நலமுடன் குணமாகி அவன் வரவேண்டுமென மனசாட்சியுள்ள அனைவரும் விரும்பியிருப்பார்கள்.

சில மாதம் கழித்து ஆப்ரேசன் முடிந்து குணமாகி வந்துவிட்டான்.அவனை பார்த்ததில் எனக்கும் மகிழ்ச்சி.பள்ளி வேன் வரும் நேரத்தில் ஓடிவந்த அபிஜித்தை அவனது நெருங்கிய தோழியின் அம்மா ஆசையுடன் தூக்கிவைத்து கொஞ்சியதும்,கரகரப்பான குரலில் அவன் பேசியதும் யாருக்கும் மறக்கமுடியாது.மொட்டையடித்து முடி வளர்ந்திருந்த தலையுடன் வந்திருந்த அபிஜித் சில நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவான் என்றார் அவனது அப்பா.  

சில நாட்களுக்கு பின் அபிஜித் மீண்டும் லக்னோவிற்கு போய்விட்டான்.அவனது அப்பா மட்டும் இங்கிருந்தார்.எப்போதும் எங்கு அவரை பார்த்தாலும் அபிஜித் எப்படியிருக்கிறான் என்று கேட்பதுதான் வழக்கம்.அவரும் நலமுடன் இருப்பதாக சொல்வார்.தற்போழுது ஊரிலிருந்து வந்த எனக்கு இரண்டு நாள் கழித்துதான் செய்தி கிடைத்தது.அபிஜித் இறந்துவிட்டானாம்.தீபாவளியன்று குதுகலமாக இருந்தவன் அன்று இரவு லேசான காய்ச்சலுடன் படுத்தவன் விடியற்காலையில் வித்தியசமாக உதைந்ததைக் கண்டு அவனது அம்மா திடுக்கிட்டு எழுந்து பார்க்கும்போது நீண்ட சுவாசமாக கண்கள் பிதுங்கி இருந்தவனை பதறியடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலே அவனது உயிர் பிரிந்துவிட்டதாம்.அவனுக்கு கிரியை  காரியமெல்லாம் முடிந்தபின்தான் இந்த செய்தி எனக்கு கிட்டியது.கேட்டதும் பெரிய உயிர் பிரிந்தாலே தாங்க முடியாத நிலையில் கண்கலங்கி நொந்துபோனேன்.முற்றிலும் மனம் பாதித்து போனோம்.

அவனது பெற்றோரை விசாரித்தாலும் கஷ்ட்டம்.விசாரிக்காமலும் இருக்க முடியாது.அந்த பெற்றோரின் நிலை யாருக்கும் வரக்கூடாது.லச்சக்கணக்கில் பணம் செலவானாலும்  அபிஜித்தின் உயிரை காக்க முடியாமல் அவர்களின் தவிப்பை சொல்ல முடியவில்லை.ஒரு நாள் பள்ளி வேன் வரும் நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஜன்னல் வழியாகப் பார்த்து கதறி அழுவதை திரும்பி பார்க்க கூட தைரியம்வராமல் வந்த அழுகையை துடைத்துக்கொண்டேன்.

என் கையைப் பிடித்திருந்த என் மகள் ஏம்மா அழுகிறீங்க என்றதும் அபிஜித் இறந்துவிட்டதை மீண்டும் மகளிடம் சொன்னேன்.அவள் அப்பாவியாக இனிமே அபிஜித் ஸ்கூலுக்கு வரமாட்டானா என்று கேட்டாள்.பதில் சொல்வதற்குள் இவ்ளோ நாள் லீவ் போட்டான்னா அவங்க  மேம் திட்டப்போறாங்க என்கிறாள்.வாய மூடுன்னு கோபமாக சொன்னதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை.வந்த வேனில் அனுப்பிவிட்டு வீடு வந்தேன்.வாழ்க்கையில் எவ்வளவு கொடுமையான நடைமுறைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.

நல்லதுக்கு ஒன்று சேராட்டாலும் துக்கத்திலாவது ஒன்று சேரனும் என்பார்கள்.ஒரு சில வசதி படைத்த மனிதர்கள் அபிஜித் இறந்ததை விசாரிக்க கூட போகவில்லை.எங்களுக்கு பழக்கமில்லை என்று பதில் வந்தது.குழந்தையின் மரணம் கூட இப்படிபட்ட மனிதர்களை பாதித்துவிட இல்லை.

அடுத்த விசியத்திற்கு வருகிறேன்.வட மாநிலங்களில் அது நடக்கிறது,இது நடக்கிறதுன்னு பல பதிவுகள் பதிந்துருக்கிறேன்.ஒரு கன்ராவியும் நடைபெறுவதை சொல்ல விரும்புகிறேன்.நான் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இதற்கு பின்னூட்டங்கள் எப்படியிருக்கும்னு யூகிக்க முடியும்.சப்போர்ட் அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது படிப்பவர்களின் விருப்பம்.இங்கு பதிந்துவிட்டால் மட்டும் எந்த தீர்வும் நிகழப்போவது இல்லை.இருந்தாலும் என் பதிவை படிப்பவர்கள் தெரிந்துகொள்ள பதிகிறேன்.

எத்தனையோ வசதிகளுடன் மனிதன் வாழ்ந்தாலும் இன்னும் ஒருவேளை உணவிற்கோ,இருவேளை உணவிற்கோ போராடும் மக்கள் எத்தனை பேர் உள்ளனர்.அவர்களுக்கெல்லாம் பிழைக்கத் தெரியவில்லை என்று அர்த்தமா?எத்தனை திறமைசாலிகள் தமது திறமைக்கும்,விருப்பத்திற்கும் தகுந்த படிப்போ,வேலைவாய்ப்போ கிடைக்காமல் கிடைத்ததை வைத்து வாழ்ந்துகொண்டுள்ளனர்.எல்லாருக்கும் நிறை குறை எல்லாவற்றிலும் இருக்கும்.

ஒருவருக்கொருவர் மீதுள்ள நம்பிக்கையில் வாழ்க்கையை நகர்த்துகிறோம்.பிள்ளைகளோ கணவரையோ படிப்பிற்காக,பிழைப்பிற்காக வெளிநாட்டிற்கோ,வெளி மாநிலத்திற்கோ அனுப்புகிறோம்.ஹெச்.ஐ.வி  யுடன் இருப்பவனுக்கு வெளிநாடு செல்ல அனுமதியில்லை.இங்கிருந்து நல்லபடியாக போனவன் வரும்போது ஹெச்.ஐ.வியுடன் வந்தால் எந்த அரசும் பொறுப்பேற்காது.அவன் செய்த தப்பிற்கு யார் என்ன செய்ய முடியும்.தப்பு செய்வதற்கு குடும்பத்துடன் இல்லாமல் இருப்பது மட்டும் காரணம் அல்ல.தப்பு செய்ய மனது துணிந்துவிட்டால் கோவிலுக்குள் இருந்தாலும் நடந்தாகிவிடும்.

கள்ளக் காதல்,கள்ளத் தொடர்பு அங்காங்கு ஊடுருவி இருப்பதை அக்கம்பக்கத்தில் கேள்விப்பட்டிருப்போம்.செய்தித்தாளில் படித்திருக்கலாம்,செய்தியாக கேட்டிருக்கலாம்.டெல்லி,மும்பாய் போன்ற இடங்களில் விபச்சாரத்திற்கென்று தனி இடங்கள் இருப்பதை கேள்விப்பட்டிருப்போம்.ஒரு நிகழ்வை அடிக்கடி பார்த்ததில் மன வேதனையுடன் துணிச்சலாக இதை சொல்கிறேன்.

அவ்வப்போது தமிழ்நாடு வரும் நாங்கள் மெயின் தில்லி ரெயில்வே ஸ்டேசன் வருகிறோம்.ஆனால் ஒவ்வொருமுறை தமிழ்நாட்டிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரசில் வரும்போது தில்லி ரெயில்வே ஸ்டேசன் வெளிவாயிலை கடக்கும்போது ஒன்று அல்லது இரண்டு பெண்கள் வெளியே வரும் ஆண்களை குறிவைத்து தேசியக்கொடியை சட்டையில் குத்தி முகவரி வேண்டுமா.?ஃபோன் நம்பர் வேண்டுமானு கேட்டு வருகிறார்கள்.அவர்கள் சிவப்பு விளக்கு பகுதி பெண்களாம்.

வேண்டாமென்று பிடிவாதமாக விளக்கும் ஆண்களை அவர்கள் கட்டாயப்படுத்துவதில்லை.ஒருமுறை கூட்டத்தில் கணவரை விட்டுவிட்டேன்.கணவர் வலது பக்கம் போயிருக்கிறார்.நான் இடது பக்கம் போய்விட்டேன். மெயின் கேட்டிற்கு வந்தாக வேண்டுமென மொபைலில் அழைக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன்.அப்பதான் பார்த்தேன் நடுத்தர வயதான ஒருவரின் சட்டையில் கொடி குத்திக்கொண்டே ”ஆஜாவ்,ஆஜாவ்,ஆஜாயிங்கே(வா,வா,வறீங்களா) என்றார் அந்த பெண்.அவர் அய்யோ என்றதும் அந்த பெண் தமிழிலும் அழைத்தார்.

அதற்குள் என் கணவர் என் எதிரே வந்துவிடவும்(திட்டும் வாங்கினேன்) நாங்கள் அந்த இடத்திலிருந்து கிளம்பிவிட்டோம்.ஆனாலும் நான்  திரும்பி பார்த்துக்கொண்டே வந்தேன். அந்த நபர்  அந்த பெண்ணிடமிருந்து  தனது மொபைலில்  எதோ குறித்தவண்ணமிருந்தார். அதற்குபின் என்ன ஆனதோ யாருக்குத் தெரியும்.யார் பெற்ற பிள்ளையோ,யாருடைய கணவனோ,யாருடைய சகோதரணோ,

இந்த ஆறுவருடங்களில் ரெயில்வே ஸ்டேசன் வெளி வாயிலில் இப்படியான பெண்கள் அங்கும் இங்கும் சுற்றி ஆள் பிடிப்பதை பார்த்திருக்கிறேன்.அவர்கள் பயன்படுத்தும் கொடிதான் இன்னும் வேதனையான விசியம்.பல ஆண்கள் தவிர்த்து செல்வது கொஞ்சம் ஆறுதலான விசியம்தான்.இந்தக் காட்சிகளை அந்த வாயிலைக் கடக்கும் சில நிமிடங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் போலிஸ்,வியாபரிகள் வழக்கமாக வந்து செல்லும் அனைவரும் பார்க்கிறார்கள்.யாரும் எதிர்ப்பதாகத் தெரியவில்லை.சில சிக்னல்களிலும் இப்படியான பெண்கள் சுற்றி அழைப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.யாரை என்ன குற்றம் சொல்ல முடியும்.

இவைகளெல்லாம் நிறைந்துள்ள இவ்வுலகில் மனிதனாக,மனசாட்சியுள்ளவராக வாழ்வது வாழ்க்கைக்கு சவால்தான்.

மற்றபடி இங்கு இப்போழுது குளிர் ஆரம்பித்துவிட்டது.
இனி மனிதனுடன் இவர்களும் குளிர் காப்பு ஆடைகளுடன் காட்சி தருவார்கள். (படங்கள் அனைத்தும் சென்ற வருட குளிர் காலத்தில் வழிப்போக்கில் கிளிக்கியது)



22 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணத்தில் முதல் வோட் நானே போட்டுவிட்டேன். நீங்கள் 2 வது வோட் போட்டால் போதும். vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என் கையைப் பிடித்திருந்த என் மகள் ஏம்மா அழுகிறீங்க என்றதும் அபிஜித் இறந்துவிட்டதை மீண்டும் மகளிடம் சொன்னேன்.அவள் அப்பாவியாக இனிமே அபிஜித் ஸ்கூலுக்கு வரமாட்டானா என்று கேட்டாள்.பதில் சொல்வதற்குள் இவ்ளோ நாள் லீவ் போட்டான்னா அவங்க மேம் திட்டப்போறாங்க என்கிறாள்.வாய மூடுன்னு கோபமாக சொன்னதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை.வந்த வேனில் அனுப்பிவிட்டு வீடு வந்தேன்.வாழ்க்கையில் எவ்வளவு கொடுமையான நடைமுறைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.//

குழந்தை அம்ருதாக்குட்டியிடம் இதைச்சொல்லியிருக்க வேண்டாமே!. ஏதோ வேறு ஒரு ஊருக்குப் (தாத்தா பாட்டி இருக்கும் ஊரில்) பள்ளியில் சேர்ந்து படிக்கப்போய் இருக்கிறான் என்று சொல்லியிருந்திருக்கலாம்.

மிகவும் படித்ததும் மனம் வேதனையாகிப் போய் விட்டது.

Angel said...

//என் கையைப் பிடித்திருந்த என் மகள் ஏம்மா அழுகிறீங்க என்றதும் அபிஜித் இறந்துவிட்டதை மீண்டும் மகளிடம் சொன்னேன்.//
உங்க மனவேதனை புரிகிறது ஆச்சி .பாவம் குழந்தைக்கு தெரியாது அபிஜித் திரும்பி வர முடியாத இடத்திற்கு சென்றவிட்டார் என்பது .
கடவுள் மேல் சில நேரம் கோபம் கோபமாக வரும் .அந்த சின்ன குருத்து வாழ வேண்டிய வயதில் மொட்டிலே கருகி விட்டது .வேதனையான விஷயம்

Angel said...

இரண்டாவது சம்பவம் .தேசிய கொடியை கேவலபடுத்தும் இவர்கள் என்ன மாதிரியான வகையில் சேர்த்தியோ .இவர்கள் பாவத்தில் வீழ்வது மட்டுமின்றி இவர்களால் எத்தனை பேருக்கு பாதிப்பு .வெறுப்பாக இருக்கு .

Angel said...

குளிர்கால உடைகள் இவங்களுக்குமா .அழகா இருக்கு ஷர்ட் போட்ட ஆடு .
இங்கும் அப்படிதான் ஆச்சி ஷூ சாக்ஸ் எல்லாம் போட்டு போறாங்க நாலு கால் ஜீவன்கள்

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்
வருகைக்கும் வாக்களிப்பிற்கும் நன்றி.

மகளிடம் பதில் சொல்வதுதான் எனக்கு பெரிய சிந்தனை(வேலை).அவள் கேக்கும் கேள்விகளும் என்னை சிந்திக்க வைக்கும்.இன்னும் என்னால் அபிஜித் இழப்பை சமாதானம் செய்ய முடியவில்லை.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஏஞ்சலின்

வாங்க.பாருங்க கண்ணுக்குத் தெரிந்து எத்தனை கொடுமைகள் நடக்கிறது.தெரியாமல் என்னென்னவோ நிகழ்ந்துகொண்டுதான் உள்ளது.

இதையெல்லாம் நம்மால் வேடிக்கைதான் பார்க்க முடியும் எனும்போது மனிதப்பிறவியானதில் மகிழ்ச்சி ஏற்படுவதில்லை.

//ஷூ சாக்ஸ் எல்லாம் போட்டு போறாங்க நாலு கால் ஜீவன்கள்//

அட வித்தியாசமா இருக்கே.உங்க பக்கம் இன்னும் அதிக குளிர் இருக்குமே.அதான்.

raji said...

முதல் விஷயம் மனதில் கனமாக இறங்கி விட்டது.அந்த பெற்றோர்கள் படும் பாட்டை எவராலும் தீர்க்க இயலாத கனம்.

இரண்டாவது விஷயம்: இதை முழுக்க நிறுத்த இயலாவிடினும் கொடி பயன்படுத்துவதை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டே ஆக வேண்டும்.மற்ற படி ஒழுக்கம் என்பது தனி மனிதர்கள் கடைப் பிடிக்காமல் கட்டுக்குள் கொண்டு வருதல் சுலபமல்லதான்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ராஜி

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.பேருந்தில் ஆண் பக்கத்தில் உக்கார தயங்கும் பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள்.இதே உலகில் இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள்.இந்தியர்கள்னு நிருபிக்க இந்த கொடி முயற்சியோ என்ன கருமமோ தெரியலங்க.

சிவகுமாரன் said...

Brain Tumor க்கான அறுவை சிகிச்சையையும் , Post Operation சிகிச்சையையும்(Radiation, Chemo) அருகிருந்து பல மாதங்கள் உடன் கண்டு அனுபவித்த கொடுமைக்கு ஆளானவன் நான். பக்கத்து அறையில் சிகிச்சை பெற்ற கௌஷிக் என்ற 5 வயது சிறுவனின் மரணம் என்னை அடித்துப் போட்டது எதிரிக்கும் இந்த கொடுமை நேரக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன்

சிவகுமாரன் said...

அந்த ஆதி காலத் தொழிலை ஒழிக்க முடியாவிட்டாலும் அட்லீஸ்ட் தேசியக் கொடியை அவமதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் செய்வார்களா ?

ஆச்சி ஸ்ரீதர் said...

@சிவகுமாரன்
வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி.

அந்த சிறுவனின் மரணம் ஏற்படுத்திய ரணம் கொடுமையாகவே உள்ளது.யாருக்கும் இந்த நிலை வரக்கூடாதுதான்.

கொடி விசியத்தை யாரும் தட்டிக் கேட்பதாகத் தெரியவில்லை.

அம்பாளடியாள் said...

அருமையான பகிர்வு அழகான தளம்!....வாழ்த்துக்கள்
தொடர்ந்தும் கலக்குங்க ...........

ADHI VENKAT said...

அபிஜித்தின் மரணம் மனதை கனக்க வைத்து விட்டது. கடவுள் ஏன் இப்படியெல்லாம் சோதிக்கிறார்...

இரண்டாவது விஷயம் தில்லியின் பல இடங்களில் இப்படிபட்ட பெண்களை பார்த்திருக்கிறேன். தேசியக் கொடியை இந்த செயலுக்கு பயன்படுத்துவது கண்டிக்க தக்கது.

ஆச்சி ஸ்ரீதர் said...

@அம்பாளடியாள்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

@ஆதி

இரண்டு விசியத்திலும் வேடிக்கைதான் பார்க்க முடிகிறது.வேதனைதான் மிஞ்சுகிறது.

கீதமஞ்சரி said...

மரணம் என்றால் என்னவென்றே அறிய இயலாத வயதில் மரணம்! அதுவும் சிகிச்சைக்காக பல உபாதைகளை அனுபவித்தப்பின்! நினைக்கவே மனம் கனக்கிறது. அந்தக் குழந்தையின் பெற்றோர் நிலை மிகவும் வேதனைக்குரியது.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கீதா
வாங்க.
அந்த பெற்றோரை நேருக்குநேர் பார்க்கவே சங்கடமாக உள்ளது.

இராஜராஜேஸ்வரி said...

கனக்கவைக்கும் பகிர்வுகள் ..

kaialavuman said...

Welcome back.
ஊருக்குச் சென்றுத் திரும்பியதும் கனமான நிகழ்வுகளைக் கேள்விப் பட்டதால், கனமான பதிவா?
சில நேரங்களில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை. அதில் மிகவும் முக்கியமானது மனிதனின் வாழ் நாட்கள். என்ன சிறு குழந்தை, அதுவும் அறிமுகம் உள்ள குழந்தை என்றால் இது போன்ற வருத்தங்களும் சங்கடங்களும் தவிர்க்க முடியாதவை.

ஆச்சி ஸ்ரீதர் said...

@இராஜராஜேஸ்வரி
@வேங்கட ஸ்ரீனிவாசன்

வருகையும் கருத்துப்பகிர்வும் ஆறுதல் அளிக்கிறது.

Chemmal said...

//.யார் பெற்ற பிள்ளையோ,யாருடைய கணவனோ,யாருடைய சகோதரணோ//

பெண்மையும் பண்பாடும் நிறைந்த வரிகள். உண்மையிலேயே நெகிழ்ந்து விட்டேன். இரண்டு மூன்று நாட்களாக மனதில் திரும்பத் திரும்ப ஓடிகொண்டிருக்கிறது. கமென்ட் எழுதாமல் தப்பிக்க முடியவில்லை. பெருமையாக இருக்கிறது.

ஆச்சி ஸ்ரீதர் said...

@chemmal

எனக்கு பதிவுலகை அறிமுகப்படுத்திய தங்களின் வருகையிலும்,கருத்திலும் மகிழ்கிறேன்.

இந்த இரண்டாவது விசியத்தினால் நம்பிக்கை என்பதே வீண் என்று தோன்றுவதுண்டு.